குமரி சிவாலயங்களில் மராமத்து பணிகளில் முறைகேடு அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 4 அதிகாரிகள் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

நாகர்கோவில் : குமரி மாவட்ட சிவாலயங்களில் மராமத்து பணிகள் நடந்ததில் ரூ.3.48 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 4 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்கள் உள்ளன. சிவராத்திரி விழாவின் போது மராமத்து பணிக்காக  தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யும். அதன்படி கடந்த 20.2.2020, 21.2.2020ல் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாலயங்களில் மராமத்து பணிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. அந்த வகையில் திற்பரப்பு மகாதேவர் கோயில், திருமலை மகாதேவர் கோயில்களில் பல்வேறு பணிகள் நடந்ததாக கூறி ரூ.3.48 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள பல்வேறு பணிகளை பக்தர்கள் சங்கம், அறக்கட்டளைகளுமே செய்துள்ளன. ஆனால், டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்ததாக போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். விசாரணையில் இணை ஆணையராக இருந்த அன்புமணி தூண்டுதலின் பேரில் இந்த முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது அன்புணி மற்றும் அறநிலையத்துறை குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் பி.ஆனந்த், மராமத்து கண்காணிப்பாளர் அய்யப்பன், திற்பரப்பு, திருமலை, பொன்மனை மற்றும் திருநந்திக்கரை கோயில்கள் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி), 167, 409, 420, 34 ஐபிசி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: