ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை: ராமேஸ்வரம் கடற்கரை உள்பட நீர்நிலைகள் வெறிச்சோடின

சென்னை: ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை உள்பட நீர்நிலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வரும் 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்று ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி அமாவாசையன்று கடற்கரை, ஆற்றங்கரை, கோயில் தெப்பக்குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக நீர்நிலைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோயில்களுக்கு பக்தர்கள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை பெரியகோயில், அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்பட அனைத்து கோயில்களும் இன்று மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக  மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, காவிரி படித்துறைகள் மற்றும் நீர்நிலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை நேற்றிரவே மூடப்பட்டு விட்டது. இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டபம் படித்துறையும் மூடப்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடற்கரைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

ராமேஸ்வரம்

ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் உச்சிப்புளி அருகிலுள்ள பிரப்பன்வலசை முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் 32 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பட்டது.

மேலும்,  ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பக்தர்களின் புனித நீராடல் இன்றி வெறிச்சோடியது.  

கன்னியாகுமரி

ஆடி அமாவாசை தினமான இன்று கன்னியாகுமரியில் பக்தர்கள் பலி தர்ப்பண பூஜை செய்து நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை தடுக்க நுழைவு வாயில் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி நுழைவு வாயில் பகுதிகளான அகஸ்தீஸ்வரம் அருகே தலக்குளம் சாலை, விவேகானந்தபுரம் சாலை, லீபுரம் சாலை, நான்கு வழி சீரோபாயின்ட், சிலுவை நகர் மற்றும் கன்னியாகுமரி ரவுண்டா பகுதிகளிலும் டிஎஸ்பி ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களில் போலீசார் பேரிகார்டுகள் வைத்து சாலை முழுவதும் அடைத்து உள்ளனர். இதனால் வழக்கமாக ஆடி அம்மாவாசை தினத்தில் களைகட்டும் கன்னியாகுமரி கடற்கரை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: