உடுமலை பொன்னிகாட்டுதுறை தடுப்பணை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா? ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகே பொன்னிகாட்டுதுறை தடுப்பணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொது மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 18 கி.மீ., தொலைவில், குறிச்சிக்கோட்டைக்கும், குமரலிங்கத்துக்கும் நடுவே உள்ள பெருமாள்புரத்தில் இருந்து தெற்கே பொன்னிகாட்டுதுறை செல்லும் வழியில், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் நீர்வழிந்து செல்வது அழகிய கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை பார்வையிட சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த தடுப்பணை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் கால்நடைகளுக்கான குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக உள்ளது. அமராவதி அணையின் முதல் தடுப்பணை இதுவாகும்.

ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் கீழ்பவானி ஆற்றில் தடுப்பணை கட்டியதால், அது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அங்கு வந்து செல்கின்றனர். ஆழியாறு தடுப்பணைக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதேபோல் பொன்னிகாட்டுதுறை தடுப்பணையையும் மேம்படுத்தினால், உடுமலை, கொழுமம் பகுதியில் சுற்றுலா தலம் ஏற்பட வாய்ப்பாக அமையும். இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், கொழுமம் வழியாக திருமூர்த்திமலை, அமராவதி, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். இதனால், பொன்னிகாட்டுதுறை தடுப்பணையும் சுற்றுலா பயணிகளை எளிதில் கவர முடியும். மேலும் வெளியூர் மக்களும் இந்த ஊரின் பெருமையை அறிந்துகொள்ள முடியும். இது பற்றி கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த்குமார், இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொது மக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: