ரிவால்டோ யானை வனத்துக்குள் போகாமல் அடம்: மீண்டும் மசினகுடி வந்தது

கூடலூர்: மசினகுடியில் மரக்கூண்டில் அடைத்து 85 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த யானை 2 நாட்கள் முன்பு சிக்கல்லா வனத்தில் விடப்பட்டது. ஆனால் ஒரே நாளில் யானை மீண்டும் மசினகுடி நோக்கி நேற்று திரும்பி வந்தது. நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வனத்தில் சுற்றித்திரிந்த ரிவால்டோ என்ற யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனத்தினர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பையடுத்து யானையை பிடித்த வனத்துறையினர் அதனை மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைத்து 85 நாட்களாக சிகிச்சை அளித்தனர். பின்னர் யானை குணமானதையடுத்து நேற்று முன்தினம் லாரியில் ஏற்றி 35 கிமீ தொலைவில் உள்ள சிக்கல்லா வனத்தில் வனத்துறையினர் விடுவித்தனர்.

ஆனால் இந்த யானை நேற்று மீண்டும் மசினகுடியை நோக்கி திரும்பி வரத்துவங்கியது. இந்த யானையை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப கும்கி  யானைகளுடன் வனத்துறையினர் முயற்சித்தனர். எனினும் இரவு  நேரமானதால் ஆக்ரோஷமாக திரும்பும் யானை அதன் இருப்பிடமான வாழைத்தோட்டம்  பகுதியை சென்றடையும் வரை வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த யானையை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: