சென்னை: ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூபாய் 1500 லிருந்து ரூ 5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை சிவானந்தா சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் (RCH) தூய்மைப் பணியாளர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூ 5000 வழங்கும் உத்தரவுக்கு அரசாணையை உடனடியாக வெளியிட்டு, 2025 ஏப்ரல் மாதம் முதல் ,மாதத் தொகுப்பூதியம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும். பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக தகுதிப் பெற்று , காத்திருப்புப் பட்டியலில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி.எச் தூய்மை பணியார்களை விரைவில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக, பணி நியமனம் செய்ய வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக ,பணி பெற தகுதியற்றவர்களாக 736 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நீண்ட கால பணியை கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி, பரிசீலனை செய்து முடிந்த வரையில் அவர்களுக்கும் ,பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி வழங்கிட வேண்டும்.
கொரோனா ஊக்கத்தொகை வழங்கப்படதா, மீதமுள்ள 459 பேருக்கு, கொரோனா ஊக்கத்தொகை தலா ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
