கொரோனா பரவல் 3ம் அலையை தடுக்க அரசின் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

மாமல்லபுரம்: தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை கடந்த மாதம் வரை கட்டுக்குள் இருந்து வந்தது. தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திலும் 2வது அலை தொடர்ந்து அதிகரிப்பதால், அதனை முழுமையாக கட்டுப்படுத்தவும், 3வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அரசின் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கணேஷ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை அனைத்து வியாபாரிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கடைகளின் முன்பு சானிடைசர் வைக்க வேண்டும். 2 மீட்டர் இடைவெளி விட்டு வட்டமிட்டு கடைக்கு வருபவர்களை நிற்க வைக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வந்தால், பொருட்கள் வழங்க கூடாது.

கடைகளின் சுவரில் அனைவருக்கும் தெரியும் வகையில் முக கவசம் அணிந்து வர வேண்டும் என துண்டு பிரசுரம் ஒட்ட வேண்டும். இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து வியாபாரிகளும், முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி கூட்டரங்கில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் அம்பிகாபதி வரவேற்றார். கூட்டத்தில் வியாபாரிகள் அனைவரும் தங்களது, கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாய முககவசம் அணிய வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்கள், முககவசம் அணியாமல் அனுமதிக்க கூடாது. கடைகளின் முகப்பில் கட்டாயம் சானிடைசர் வைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பேசினர். தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories:

>