ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் குவிந்த புதுமண தம்பதியினர்: கொரோனா விதிமுறைகளை மறந்த பொதுமக்கள்

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு என்பது நதியைக் கொண்டாடும் விழா. தண்ணீரைக் கொண்டாடும் வைபவம். முக்கியமாக, காவிரி நதியைப் போற்றுகிற ஒப்பற்ற திருவிழா. தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் காவிரித்தாயை வழிபடலாம்.

காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி உள்ளிட்ட ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் இன்றைக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை அற்புதமாக கொண்டாடுவார்கள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை அதன்படி கடலூர் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். காவிரி நீரை வரவேற்கும் வகையில் புதுமண தம்பதியினர் காவிரி தாயை வழிபட்டு பழைய தாலிகயிற்றை மாற்றி புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து பூஜை பொருட்களை எடுத்து சென்று கொள்ளிடம் ஆற்றில் வைத்து காவிரி தாயை வழிபட்டனர். மேலும் ஆற்றுநீரில் மலர்களை தூவியும் வழிபட்டனர்.

கொரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்களை அரசு தீவிரமாக கண்காணித்து நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று கூடாத வண்ணம் பல்வேறு இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி உள்ளனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் ஒன்றுகூடி உள்ளதால் கொரோனா நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: