திருவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை ஆய்வில் தகவல்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில், சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வனத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தில் புலிகள், சிறுத்தைகள் குறித்து கணக்கெடுப்புக்காகவும், அவற்றின் நடமாட்டத்தை பதிவு செய்யும் நோக்குடனும் வனத்தின் பல்வேறு பகுதிகளில் நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். தற்போது அந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் பல்வேறு விலங்குகள் குறித்து தகவல்கள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சிறுத்தைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி கூறுகையில், ‘‘திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி வனவிலங்குகள் வாழ பாதுகாப்பான இடமாக உள்ளது. 2021ம் ஆண்டின் ஆய்வின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 2.11 என்ற விகித அளவில் சிறுத்தைகள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7.05 என்ற விகிதத்திலும், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 10.18 என்ற விகிதத்திலும் சிறுத்தைகள் உள்ளது. ஆனால், திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை சரணாலயத்தில் யாரும் எதிர்பாராவிதமாக அதிக அளவாக 20.43 என்ற விகித அளவில் சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுத்தைகள் அதிகரிக்க சரிவிகித உணவு, வாழ்விட சூழல் காரணமாக இருக்கலாம். மேலும் சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடாமல் தடுக்க, வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது’’ என்றார்.

Related Stories: