செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் 8 லட்சத்தில் ஆர்ஓ பிளான்ட் திறப்பு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து புதிய கலெக்டர் அலுவலகம் வெண்பாக்கத்தில் கட்டப்படுகிறது. இதற்கிடையில், பழைய சப் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக செயல்படுகிறது. வாரந்தோறும், மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை உள்பட பல நிகழ்ச்சிகள் இந்த கட்டிடத்தில் நடக்கிறது. இங்கு, தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதேபோல், இந்த வளாகத்தில் டீக்கடை ஜெராக்ஸ் கடைகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையொட்டி அங்கு மேற்கண்ட கடைகளும், குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கலெக்டர், உடனடியாக குடிநீர் பிளான்ட் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ₹8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. புதிய ஆர்ஒ பிளான்ட்டை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, வளாகத்தில் வாழை மனக்கன்றுகளை நட்டார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது, ஆர்ஓ பிளான்ட் மூலம் தினமும் 2 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.  பல்வேறு தேவைக்காக கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள், எந்நேரமும் குடிநீரை பருகலாம். பணம் கொடுத்து வெளியே வாங்க வேண்டாம். அலுவலக ஊழியர்களும் இந்த குடிநீரை பயன்படுத்தி கொள்வார்கள்  என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: