மகளிர் வட்டு எறிதல் பைனலுக்கு தகுதி: கலக்கினார் கமல்பிரீத்

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் போட்டியின் பைனலில் விளையாட, இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தகுதி பெற்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் தடகள போட்டிகள் தொடங்கிய 2வது நாளான நேற்று மகளிர் வட்டு எறிதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அனுபவ வீராங்கனை சீமா பூனியா (38 வயது), இளம் வீராங்கனை கமல்பிரீத் பங்கேற்றனர். ஏ பிரிவு தகுதிச் சுற்றில் மொத்தம் 15 வீராங்கனைகள் களமிறங்கினர். இந்த சுற்றில்  சீமா 60.57 மீட்டர் தொலைவுக்கு எறிந்து 6வது இடம் பிடித்தார். பி பிரிவு தகுதிச் சுற்றில் களமிறங்கிய கமல்பிரீத் தனது முதல் வாய்ப்பில் 60.29 மீட்டர் தூரம் எறிந்தார். அடுத்தடுத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் 63.97 மீட்டர் மற்றும் 64.00 மீட்டர் தூரத்துக்கு வட்டை சுழற்றி எறிந்து அசத்தினார். 64.00 மீட்டர் தூரம் எறிந்தால் நேரடியாக இறுதிப் போட்டிக்கி முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் பி பிரிவில் 2வது இடம் பிடித்ததால் மிக எளிதாக இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தார். வீராங்கனைகள் வட்டு எறிந்த தொலைவு அடிப்படையில் ஏ பிரிவில்  இருந்து 3 வீராங்கனைகளும், பி பிரிவில் இருந்து 9 வீராங்கனைகளும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதனால் ஏ பிரிவில் 6வது இடம் பிடித்த சீமா பூனியா பைனலுக்கு முன்னேற முடியவில்லை. இறுதிச் சுற்று போட்டி நாளை  மாலை நடைபெறும்.  ஏ, பி என 2 பிரிவுகளிலும்  வட்டு வீசிய வீராங்கனைகளில் பட்டியலிலும்  கமல்பிரீத் 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை வலரி ஆல்மேன் 66.42 மீட்டர் தொலைவுக்கு வீசியுள்ளார்.

தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு 2வது இடம் பிடித்துள்ள கமல்பிரீத், பைனலிலும் அசத்தி பதக்கம் வெல்லும் வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே உள்ளது. கொரோனா ஊரடங்கு சூழல் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கமல்பிரீத், அதில் இருந்து மீள்வதற்காக சிறிது காலம் கிரிக்கெட் விளையாடியதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், கபர்வாலா கிராமத்தை சேர்ந்த கமல்பிரீத் ரயில்வே ஊழியர் ஆவார். ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: