திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நாளை முதல் 2 நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து: கொரோனா பரவலால் எச்சரிக்கை நடவடிக்கை

திருப்போரூர்: கடந்த மே மாதம் கொரோனா அதிகரித்ததன் காரணமாக 25 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவித்து, மூடப்பட்டு இருந்த கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த வேளையில், கொரோனா பரவல் கடந்த நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில், ஆடி மாத கிருத்திகை தினத்தில் முருகன் கோயில்களில் ஏராளமானோர் காவடி எடுத்து மொட்டை அடித்து கோயிலை வலம் வந்து வழிபடுவார்கள். இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில், பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, இளையனார் வேலூர், குன்றத்தூர் உள்பட பல்வேறு பகுதகிளில் உள்ள முருகன் கோயில்களில் நாளை மறுநாள் ஆடிக்கிருத்திகை தினத்தில் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ராகுல்நாத் அறநிலையத்துறை ஆலய செயல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை தினத்தில் சாமி தரிசனம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் (நாளை) 1, 2 தேதிகளில் ஆடிக்கிருத்திகை தினத்தில் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதனால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள், தினசரி வழிபாடுகள் ஆகியவை வழக்கம்போல் கோயில் சிவாச்சாரியார்கள் மூலம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: