திண்டிவனம் அருகே பரபரப்பு சுடுகாட்டுக்கு பாதை கேட்டு திரண்ட பொதுமக்கள்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தனியார் நிலத்தின் வழியாக சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் நேற்று காலை திரண்டனர். அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் ஊராட்சி மேட்டூர் கிராமத்தில் பொதுசுடுகாடு உள்ளது. கடந்த மூன்று தலைமுறையாக ஊரில் யாராவது இறந்தால் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று உடலை அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் ராஜா, சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வேலி அமைப்பதற்காக கற்களை நட்டாராம்.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் கலெக்டர், தாசில்தார் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட நிலத்தில் சுடுகாடு செல்வதற்கு தனியாக பாதை ஒதுக்கி தரவேண்டும் என கோரியிருந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதமாகி வந்தது. இதற்கிடையே கிராம மக்கள் நேற்று காலை சம்பந்தப்பட்ட நிலத்தில் பைப்லைன் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண்ணைக் கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டனர்.

சுடுகாடு செல்லும் பாதைக்கு தனியார் நிலத்தின் வழியாக கண்டிப்பாக நிலம் ஒதுக்கித் தரவேண்டும், மூன்று தலைமுறையாக இந்த வழியாகத்தான் சுடுகாட்டுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் வெள்ளிமேடுபேட்டை போலீசார், டிஎஸ்பி கணேசன், தாசில்தார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>