அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு எச்சரிக்கை..!

டெல்லி: அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட 300 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பெகாசஸ் விவகாரத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடக்கவில்லை என கூறி ஒன்றிய அரசு விவாதம் நடத்த மறுக்கிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கடந்த 8 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது.

கூட்டத்தொடரின் 9 வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வருகின்றன. அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories: