தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொய்யுரு தொழில் நுட்பத்தை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? : டி.ஆர்.பாலு

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவருமான, திரு. டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று, 28 ஜூலை 2021, மக்களவையில் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும், பொய்யுரு தொழில் நுட்பத்தை தடுத்து நிறுத்த, ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மனிதக் குரலை மாற்றிப் பேசும் பொய்யொலி தொழில் நுட்ப கோளாறுகளை தடைசெய்ய, இந்தியக் குற்றவியல் சட்டத்தில் வழிவகைகள் உள்ளதா? என்றும், மாண்புமிகு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர், திரு. ராஜீவ் சந்திரசேகர் அவர்களிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.

மாண்புமிகு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர் அவர்களின் பதில் பின் வருமாறு:-தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும், பாதுகாப்பு ஆபத்தை விளைவிக்கும் பொய்யுரு தொழில்னூட்டம், கணிணியின் உதவியால், ஆள்மாறாட்ட வேலைகளை, காணொளி மூலம் செய்து, பல்வகையான தீமைகளை, விளைவித்து வருகின்றது என்றும்,தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 பிரிவு 66(சி) மற்றும் 66(ஞி) ன் படி கணிணியின் மூலம், ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது, சட்டத்திற்கு புறம்பான, ஏமாற்றுதல் குற்றமாகும் என்றும் இந்திய குற்றவியல் பிரிவு 416ன் கீழ் இவ்வகை குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும், இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும், பொய்யுரு தொழில் நுட்பத்தின் மூலம் வரும் ஆபத்துகளை தடுக்க, தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் இடைநிலை நிறுவனங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், ஆள்மாறாட்டம்,  அடையாள மோசடி ஆகிய தரவுகளை கணிணி மூலம் பரப்புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரப்படுமமென தகவல் தொழில் நுட்ப அமைச்சக இணையத்தின் மூலம், தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர்,              திரு. டி.ஆர்.பாலு அவர்கள், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு, ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர், திரு. ராஜீவ் சந்திரசேகர்  அவர்கள், விரிவான பதிலை அளித்துள்ளார்.

Related Stories: