பள்ளிகள் இயங்காததால் சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு

சேலம் : பள்ளிகள் இயங்காததால் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க கடும் நடவடிக்கை தேவை என்று போக்குவரத்து ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் இருசக்கர வாகனங்களாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனங்கள் என்றால் ஒரு தெருவுக்கு 5 முதல் 10 வாகனங்கள் மட்டுமே இருக்கும்.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவில் தான் உள்ளது. வாகனங்களை கொடுக்கும் நிறுவனங்கள், கடன் வசதிக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. இதன் காரணமாகவே இன்று இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் அதிகளவில் உள்ளது.

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு வாகனம் ஓட்டும் நபர்களும் முறையாக லைசென்ஸ் பெற்று ஓட்டி வந்தனர். ஆனால் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் கூட இரு சக்கர வாகனத்தை தாராளமாக கையாளுகின்றனர். இவர்கள் சாலையில் செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை.

சாலையில் கூட்டம் நிரம்பிய பகுதிகளில் கூட வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். இவர்களால் சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர். சமீபத்தில், ‘18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும்’ என்று  வட்டார ேபாக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த விதிமுறை கொஞ்சகாலம் கூட பயன்பாட்டில் இல்லை.

இந்த விதிமுறையை மதிக்காமல் பெற்றோர் தங்களுக்கு பிள்ளைகளுக்கு  இரு சக்கர வாகனத்தை கொடுத்து வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் இரு சக்கர வாகனம் ஓட்டும் சிறுவர், சிறுமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பு, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சாலை போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது:வட மாநிலங்களை காட்டிலும் தென்மாநிலங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய பெற்றோர்களே, வாகனத்தை கொடுத்து மகிழ்கின்றனர். சிறுவர், சிறுமிகள் பெற்றோர்கள் முன்பு குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டுகின்றனர்.

அவர்கள் சாலைக்கு வந்தபிறகு வாகனத்தை வேகமாக இயக்குகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 வயது கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தவில்லை.

சாலையில் அவர்களுக்கு முன்பு வாகனம் ஓட்டிச்செல்லும் சிறுவர், சிறுமிகளை கண்டுகொள்வதில்லை. போலீசாரின் கெடுபிடி இல்லாததால் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை ஓட்டுகின்றனர். போலீசார் இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டாமல் 18 வயது கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்களது  பெற்றோரை தண்டிக்க வேண்டும். தற்போது பள்ளிகள் இல்லாததால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. எனவே போலீசார், இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுத்தால், அபாயங்கள் தவிர்க்கப்படும். இவ்வாறு போக்குவரத்து ஆர்வலர்கள் கூறினர்.

கார் ஓட்டும் சிறுவர்கள்

‘‘கார் வைத்திருக்கும் ஒரு சிலர் தங்களது குழந்தைகளுக்கு 18 வயதுக்குள் காரை ஓட்டுவதற்கு கற்று தந்துவிடுகின்றனர். முறையாக லைசென்ஸ் பெறாமலே இவர்களிடம்  காரை கொடுத்து சாலையில் ஓட்ட வைக்கின்றனர். சாலை விதிமுறைகளை முறையாக கற்றுக்கொள்ளாத இவர்களிடம் கார்களை கொடுத்து பெற்றோர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் காரை கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்,’’ என்பதும் போக்குவரத்து ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: