திரிபுராவில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்; பிரசாந்த் கிஷோரின் ஊழியர்கள் 23 பேருக்கு தடுப்பு காவல்: ஓட்டலில் கள ஆய்வு செய்ததால் ஆளும் பாஜகவுக்கு ‘கிலி’

அகர்தலா: தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை சேர்ந்த 23 பேர் கொண்ட குழுவை, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ளூர் போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இம்மாநிலத்தில் அடுத்தாண்டு பேரவை  தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர், பிரசாந்த் கிஷோரின் குழுவினர் அகர்தலாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டதாகவும், அம்மாநில தேர்தல் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், தேர்தல் கள ஆய்வு செய்ய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பிரசாந்த் கிஷோரின் நிறுவன ஊழியர் கூறுகையில், ‘நாங்கள் எவ்வித காரணமும் இல்லாமல், ஓட்டலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். ஓட்டலில் இருந்து வெளியேறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக காவல் துறையினர் கூறுகின்றனர்’ என்றார்.

இவ்விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திரிபுரா பிரிவின் தலைவர் ஆஷிஷ் லால் சிங் கூறுகையில், ‘இது மிகவும் வெட்கக்கேடான செயல்.

அவர்களை ஓட்டலில் தடுப்புக்காவலில் வைத்துள்ள ஆளும் பாஜக அரசு, அவர்களை கண்டு ஏன் அஞ்சுகிறது. கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சிலர், கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில் நாங்கள் வெற்றி பெற்றதிலிருந்து, பாஜகவினர் எங்கள் கட்சியில் சேர்ந்து வருவதால் இப்படியெல்லாம் செய்கின்றனர். பாஜக எம்எல்ஏக்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் விரைவில் திரிணாமுல் கட்சியில் சேர வாய்ப்புள்ளது’ என்றார். இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தாவின் உறவினரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மேற்குவங்கத்தில் நாங்கள் பெற்ற வெற்றியால், அவர்கள் (பாஜக) மிகவும் திணறுகிறார்கள்.

இப்போது பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் 23 ஊழியர்களை அகர்தலாவில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். பாஜகவின் தவறான போக்கால், நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘அகர்தலா ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியேற்றப்படுவர். அதனால், அவர்களை உடனடியாக வெளியேற அனுமதிக்கவில்லை’ என்றனர்.

Related Stories: