கிரிக்கெட் விளையாட்டில் இரு குழுக்கள் இடையே மோதல்; மத்தியஸ்தம் செய்துவிட்டு திரும்பிய துணை மேயரை நோக்கி துப்பாக்கி சூடு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

ஜல்கான்: மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாட்டின் போது இரு குழுக்கிடையே ஏற்பட்ட மோதலில், மத்தியஸ்தம் செய்த துணை மேயரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் அடுத்த கோடெனகர் பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரு குழுக்களுக்கு இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தகவலறிந்த சிவசேனா கட்சியை சேர்ந்த ஜல்கான் மாநகராட்சியின் துணை மேயர் குல்பூஷன் பாட்டீல் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவர், இரு குழுக்களை சேர்ந்தவர்களையும் அழைத்து, சமாதானம் செய்ய முயன்றார். அவரது சமாதான முயற்சியின் பலனாக, இருதரப்பினரும் கலைந்து சென்றனர். அடுத்த 2 மணி நேரம் கழித்து காரில் வந்த நான்கு பேர் கும்பல் பைக்கில் சென்ற குல்பூஷன் பாட்டீலை தடுத்து அவரிடம் ‘நீங்கள் யார் எங்களுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கு? என்று கேட்டனர். பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த சிலர் குல்பூஷன் பாட்டீலையும் அடித்தனர். இந்த கும்பலிடம் இருந்து குல்பூஷன் பாட்டீல் தப்பிக்க முயன்றார். இதற்கிடையே, அந்த கும்பலில் இருந்த ஒருவன், குல்பூஷன் பாட்டீலை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டான்.

ஆனால் அவனது குறி தப்பியதால், அதிர்ஷ்டவசமாக குல்பூஷன் பாட்டீல் உயிர்தப்பினார். அப்பகுதியில் இருந்த வீட்டிற்குள் நுழைந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்த ராமானந்த் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்க குல்பூஷன் மத்தியஸ்தம் செய்தார். ஆனால், அவருக்கு எதிரான கும்பல், அவரை துரத்தி சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி அவர் உயிர்தப்பினார்.  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இருந்தும் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட கும்பலை தேடி வருகிறோம்’ என்றார். இதுகுறித்து துணை மேயர் குல்பூஷன் பாட்டீல் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சர்ச்சை போலீஸ் வரை சென்ற நிலையில், நான் அதில் தலையிட்டதால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இருந்தும், நான் சம்பவ இடத்திற்கு சென்று மோதலை தவிர்க்க மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் எனது அலுவலகத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும் வழியில், என்னை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர். அப்பகுதியில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து கொண்டதால், உயிர் தப்பினேன். ஐந்து பேர் கும்பல் இந்த தாக்குதலை நடத்தியது’ என்றார்.

Related Stories: