தொடர் கனமழையால் புளியம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு-பந்தலூரில் பேரிடர் மீட்பு குழு ஆய்வு

கூடலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த பருவமழையின் தாக்கம் நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் குறைந்தது.

இதனைத் தொடர்ந்து  நேற்று மதியத்திற்கு மேல் மீண்டும் அவ்வப்போது கனமழையாகவும், சாரல் மழையாகவும் பெய்யத் துவங்கியது. ஓவேலி, இரும்பு பாலம், கைதகொல்லி, தேவாலா பகுதிகளில்  நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும்  வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சில இடங்களில் சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றினர். பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மதியத்துக்கு மேல் பெய்த பலத்த மழை காரணமாக புளியம்பாறை வரை பகுதி வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த வருடம் மழை வெள்ளத்தால் இப் பகுதியில் உள்ள பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்காக, பால பகுதியில் தண்ணீர் செல்லாமல் வேறு பகுதியில் திருப்பி விடப்பட்ட நிலையில் மழை வெள்ளத்தால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு புதிய பாலம் பணிகள் நடைபெறும் பகுதி வழியாக வெள்ள நீர் புகுந்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: