கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பலி: யாரையும் நெருங்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது செம்பாலை. இங்குள்ள  தனியார் பள்ளி வளாகத்தின் பின்புறமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் கணேசன் தலைமையில் வனத்துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்த குட்டி யானையின் தாய் யானையும், மற்றொரு யானையும் அங்கு நின்றன. இறந்து கிடந்த குட்டி யானைக்கு அருகில் வனத்துறையினர் செல்ல முயன்றனர். ஆனால் மற்ற 2 காட்டு யானைகளும் இறந்த குட்டி யானையின் அருகே வர முடியாதவாறு தடுத்தன. வெகுநேரம் முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை. அந்த 2 யானைகளும் அங்கிருந்து சென்றால்தான் இறந்த குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்று வனத்துறையினர் கூறினர். 

மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘குட்டியுடன் இந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு உணவு தேடி யானைகள் வந்துள்ளன. திரும்பிச்செல்லும்போது குட்டி யானை சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம்’’ என்றனர். குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் அருகில் செல்வதும், இறந்த குட்டி யானையின் அருகே வனத்துறையினரை செல்ல விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருவதும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>