சிவகாசி அருகே பரபரப்பு: ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 கோடி மோசடி?.. மாஜி ராணுவ வீரர் வீடு முற்றுகை

சிவகாசி: சிவகாசி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் ராணுவ வீரர் வீட்டை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (44), முன்னாள் ராணுவ வீரர். இவர் மாதாந்திர ஏலச்சீட்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ரமேஷ் கடனாக பலரிடம் பல லட்சம் வாங்கியுள்ளார்.

முக்கியமாக, கந்தபுரம் காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் ரூ.63 லட்சம் கடனாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது ரமேஷ் மறுத்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.  இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் ரமேஷ்  தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை அவர் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை 7 மணிக்கு ரமேஷ் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரமேஷ் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. டிஎஸ்பி பாபுபிரசாந் மற்றும் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில்,‘‘ சீட் நடத்தியும், கடனாகவும் ரமேஷ் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது. முழு விசாரணைக்கு பின்னர் தான், அவர் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories: