ஒரு மாதத்திற்கு முன் தந்தை இறந்த நிலையில் விஷமருந்தி மகனும், அதிர்ச்சியில் தாயும் அடுத்தடுத்து பலியாயினர்-திருமக்கோட்டை அருகே சோகம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமம் மேலதெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(58). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு அறிவுடைசெல்வி(53) என்ற மனைவியும், சதிஷ்(24) என்ற மகனும் இருந்தனர். உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்து வந்த கல்யாணசுந்தரம் கடந்த மாதம் இறந்துவிட்டார். கல்யாணசுந்தரம் இறந்த சோகம் இருவரையும் வாட்டி வந்தது. தந்தை மீது அதிகம் பாசம் வைத்திருந்த சதிஷ் அவர் இறந்த பிறகு வேலைக்கு செல்லாமல் மன வருத்தத்தில் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு தாய் அறிவுடைச்செல்வி ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி சதிஷ் விஷமருந்தி வீட்டில் மயங்கி கிடந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சதிஷ் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இறந்தார்.சதிஷ் இறந்த செய்தி ஊரில் இருந்த அவரின் தாயார் அறிவுடைசெல்வியிடம் உறவினர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கணவர் இறந்த நிலையில் துன்பத்தில் இருந்து வந்த அவர் தற்போது மகனும் இறந்து விட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். ஒரு மாதத்திற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், தாய் ஆகிய மூவர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: