ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: சமூக இடைவௌி பின்பற்றாததால் தொற்று பரவும் அபாயம்

மண்ணச்சநல்லூர்: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவர். மேலும் மஞ்சள் ஆடை உடுத்தி நடைபயணமாக அம்மன் கோயில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவது வழக்கம். இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாகும். இதையொட்டி அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன், உத்தமர் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை பெருமாள் கோயில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்து மாரியம்மன், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், அறந்தாங்கி அம்மன் கோயில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கரூர் மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அனைத்து கோயிலிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், நெரிசலுடன் திரண்டதால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Related Stories: