திருப்பதி மலைப்பாதையில் பஸ் ஓட்டும் மொபைல் கேம் செயலி ப்ளே ஸ்டோரில் நீக்கம்

திருமலை: திருப்பதி மலைப்பாதைக்கு பஸ் ஓட்டிச்ெசல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மொபைல் கேம் செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதையில் அரசு பஸ்சை ஓட்டி செல்லும் விதமாக மொபைல் செயலி கேம் வடிவமைக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்றால் 20 லட்டுகள் வாங்கும் விதமாக, ₹179 கட்டணம் செலுத்தினால் திருப்பதி அலிபிரியில் கருடாழ்வார் சந்திப்பில் இருந்து பேருந்தை மலைப்பாதையில் ஓட்டிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விளையாட்டை விளையாடலாம்.

அதேபோல், மீண்டும் திருமலையில் இருந்து மலைப்பாதை வழியாக திருப்பதி வரும் விதமாகவும் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாடும்போது கோயில் மணி மற்றும் ஓம் நமோ வெங்கடேசாய போன்ற ஒலி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது பேருந்து தவறுதலாக விபத்துக்குள்ளாகினால், விளையாட்டு முடிவு பெறும். மேலும், விளையாட்டை தொடர விரும்பினால் லட்டு வாங்கினால் பேருந்தை ஓட்டிச்செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. புனிதமாக கருதப்படும் ஆன்மிக பயணத்தை விளையாட்டாக கொண்டு வந்து லட்டு வாங்கினால் பேருந்தை ஓட்டிச் செல்லும் விதமாக மொபைல் செயலி அறிமுகப்படுத்தியவரை கைது செய்து இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என பாஜவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மொபைல் செயலியை திருப்பதி ஏர் பைபாஸ் ரோட்டில் உள்ள டெக் மெட்சின் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான எம்ஆர் பள்ளியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஒரு வருடமாக தயார் செய்து வெளியிட்டது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, டெக்மெட்ஸ் நிறுவனத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, செயலி டிசைனர் நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது அவர் யாரையும் புண்படுத்த இந்த விளையாட்டை உருவாக்கவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், லட்டு வாங்கியதும் விளையாடும் விதமாக செய்தது, பின்னணியில் சுவாமியின் பாடல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று விஜிலென்ஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுரேஷ்குமார் ப்ளே ஸ்டோரில் இருந்து நேற்று கேமை நீக்கியதோடு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: