பெரியபாளையம் அருகே பரபரப்பு இந்தியன் வங்கியை கிராம மக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் வாடிக்கையாளர்களை மதிக்காத இந்தியன் வங்கி அலுவலர்களை கண்டித்து, பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இந்தியன் வங்கியின் கிளை செயல்படுகிறது. இங்கு, கன்னிகைப்பேர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தினர் மற்றும் 100 நாள் வேலை செய்பவர்கள் கணக்கு வைத்துள்ளார்கள். இதனால், இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், வங்கி மேலாளர், துணை மேலாளர், ஊழியர்கள் என அனைவரும் வங்கிக்கு வரும்  வாடிக்கையாளர்களை சரிவர மதிப்பதில்லை. மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது.

பெரும்பாலும், வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தமிழ் தவிர வேறு மொழி படிக்கவோ, எழுதவோ தெரிவதில்லை. இதனால், வங்கிக்கு வரும் சில வாடிக்கையாளர்களின் உதவியை நாடுகின்றனர். அதுபோல் யாரும் இல்லாத நேரத்தில், வங்கி ஊழியர்களிடம் உதவி கேட்கின்றனர். அதை வங்கி ஊழியர்கள், தரக்குறைவாக பேசுவதும், மரியாதை இல்லாமல் நடந்து கொள்கின்றனர் என புகார் எழுந்தது.இந்நிலையில், நேற்று காலை பொதுமக்கள் வங்கிக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த மேலாளர், உதவி மேலாளர் உள்பட உள்பட ஊழியர்களும் சரிவர, வாடிக்கையாளர்களை மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கன்னிகைப்பேர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள், வங்கியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: