கலைஞர் ஆட்சியில் 11.5% இருந்தது தமிழக அரசின் வருமானம் 5 ஆண்டில் 6.5% ஆக வீழ்ச்சி: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: 2014ம் ஆண்டுக்கு முன் தமிழ்நாடு அரசின் வருமானம் உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்தது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த வருமானம், கடந்த 5 ஆண்டுகளில் 6.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சுமார் 70,000 கோடி முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டி உள்ளது. இதுகுறித்து விரிவாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மூலதன செலவு வருடத்திற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளம் என்பது உற்பத்தியில் 3 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கடந்த வருடம் உற்பத்தியில் 1.5 சதவீதம் கூட முதலீடு செய்யவில்லை. அதனால் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை மூலதன செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதனை செய்தால்தான் வளர்ச்சியில் தெளிவான பாதையில் செல்ல முடியும் என்றார்.

Related Stories: