மதுரை வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் .. சிறப்பு ஏற்பாடுக்கு உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு!

மதுரை :  ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையையொட்டி மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மதுரை சத்ய சாய் நகரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று வருவதையொட்டி மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மோகன் பகவத் பயணிக்கும் வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைப்பது தொடர்பான உத்தரவுகள் இடம் பெற்று இருந்தன. அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என்று விளக்கம் வேண்டும் என்று மதுரை எம்.பி.சு வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் துணை ஆணையர் சண்முகத்தை அப்பணியில் இருந்து விடுவித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை வரவேற்றுள்ள சு. வெங்கடேசன், இந்த உத்தரவு மொத்த அரசு நிர்வாகத்திற்கும் சரியான செய்தியை வழங்குவதாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இசட் ப்ளஸ் பாதுகாப்பு பெற்ற பிரமுகர்கள் பயணம் செய்யும் போது விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சிறப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாகவும் தவறாக புரிந்துக் கொள்ளும் படியும் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: