தோப்பு வெங்கடாச்சலத்துடன் பெரும்பான்மையான நிர்வாகிகள் சென்றதால் அதிமுக மாஜி அமைச்சர் கருப்பணன் மாவட்டம் 2 ஆக பிரிப்பு: ஒரு மாவட்டத்துக்கு செங்கோட்டையன் பொறுப்பாளர்

சென்னை: பெரும்பான்மையான நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துடன் சென்று திமுகவில் சேர்ந்ததால், மாஜி அமைச்சர் கருப்பணன் மாவட்டச் செயலாளராக உள்ள ஈரோடு புறநகர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டச் செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, ஈரோடு புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட அதிமுக அமைப்பு, இன்று முதல் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்

1. பவானி சட்டமன்ற தொகுதி

2. பெருந்துறை சட்டமன்ற தொகுதி

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்

1. கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி

2. அந்தியூர் சட்டமன்ற தொகுதி

3. பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதி

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக கே.ஏ.செங்கோட்டையன் (எம்எல்ஏ மற்றம் அதிமுக அவைத்தலைவர்), ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக கே.சி.கருப்பணன் (எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளருக்கு முழு ஓத்துழைப்பு நல்கி கட்சி பணிகளை ஆற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். புறநகர் மாவட்டச் செயலாளராக கருப்பணன் இருந்தாலும், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், பெரும்பான்மையான நிர்வாகிகளுடன் திமுகவில் சேர்ந்தார். இதனால் அவரை எதிர்ப்பதற்காக தற்போது மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு, 2 மாஜி அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: