நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: இன்று நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருவதால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நபிகள் வாழ்வில் செய்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். இன்று இந்தியாவில் முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘சக குடிமக்கள் அனைவருக்கும், ஈத் முபாரக்.

ஈத்-உஸ்-ஜுஹா என்பது அன்பு மற்றும் தியாகத்தின் உணர்வை வெளிப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்குமான திருவிழாகும். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் செயல்படுவோம்’என்று பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ஈத்-உல்-ஜூஹாவுக்கு வாழ்த்துக்கள். கூட்டு பிரார்த்தனை, நல்லிணக்கம், உதவுதல் ஆகியவற்றிற்கான நாளாக இந்நாள் இருக்க வாழ்த்துக்கள்’என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘உங்கள் அனைவருக்கும் ஈத்-உல்-ஜூஹா வாழ்த்துக்கள்!’ என்று கூறியுள்ளார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பக்ரீத் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories: