சசிகலா காரில் அதிமுக கொடி இருப்பதை ஏற்க முடியாது ஜானகி போல பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சசிகலா காரில் அதிமுக கொடி இருப்பதை ஏற்க முடியாது. எந்த உரிமையும் இல்லாத அவர், தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது தேவையற்ற நடவடிக்கை. ஜானகிபோல் பெருந்தன்மையோடு அவர் கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மதியம் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது. எந்த உரிமையும் இல்லாத அவர் அதிமுக கொடியை கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி  வி.என்.ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதேபோன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும். மாறாக தடையாக இருக்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: