கர்நாடக முதலமைச்சர் பதவியை ஆக.15ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல்..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது என மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அந்த ஆடியோவில் வரும் குரல் தன்னுடையது அல்ல என நளின் குமார் மறுத்திருந்தார். இருப்பினும் எடியூரப்பாவின் ராஜினாமா உறுதியாகிவிட்டதாகவும், அவரது பதவி காலத்தின் 2வது ஆண்டு நிறைவு நாளான ஜூலை 26ம் தேதிக்கு பிறகு ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடியை எடியூரப்பா சந்திப்பதற்கு முன்பாகவே ராஜினாமா முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக எடியூரப்பாவின் ராஜினாமா உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில் மூவர் இருப்பதாகவும் ஆனால் அவர்களில் யார் அடுத்த முதலமைச்சர் என்பது குறித்து பாஜக டெல்லி மேலிடம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்திருக்கிறது.

Related Stories: