திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது சோகம் மினி லாரி மோதி சென்னை பக்தர் பலி-9 பேர் படுகாயம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது மினி லாரி மோதியதில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை ஆவடி அடுத்த வெள்ளச்சேரியை சேர்ந்த 15 பக்தர்கள் கடந்த 17ம் தேதி பாத யாத்திரையாக புறப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வடமாலைப்பேட்டை அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணியளவில் வந்தபோது பின்னால் வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும் தகவலறிந்த வடமாலைப்பேட்டை போலீசார் அங்கு வந்தனர்.

இந்த விபத்தில் வெள்ளச்சேரியை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த பரந்தாமன்(58), கார்த்தி(20), பரமேஸ்வரன்(25), வசந்தகுமார்(32), சதீஷ்(28), விக்னேஷ்(21), பாலச்சந்திரன்(25),  நவீன்(18),  வெங்கடேசன்(43) ஆகிய 9  பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அனைவரும் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.இதுகுறித்து எஸ்ஐ சிரஞ்சீவி வழக்குப்பதிந்து விழுப்புரத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் முத்து என்பவரை கைது செய்து,  லாரியை பறிமுதல் செய்தார். திருப்பதி கோயிலுக்கு பாதயாத்திரை சென்றபோது பக்தர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: