திமுக ஆட்சியில் வழங்கிய பட்டா நிலம் வழங்காமல் அதிமுக முட்டுக்கட்டை-பெண்கள் கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம் :  திமுக ஆட்சியில் வழங்கிய பட்டாக்களுக்கு அதிமுக ஆட்சி முட்டுக்கட்டையால் கிடைக்காத இலவச நிலத்தை வழங்கக்கோரி கலெக்டரிடம் பெண்கள் புகார் அளித்தனர்.

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் அ.மணக்குடியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2007ல் திமுக ஆட்சியில் இலவச நில பட்டா வழங்கப்பட்டது. இதற்கான நிலத்தை கையகப்படுத்தி பொதுமக்களுக்கு ஒப்படைக்க இருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பட்டா அடிப்படையில் கையகப்படுத்திய நிலத்தை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளில் பல முறை மனு அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து அ.மணக்குடியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பட்டா அடிப்படையில் தங்களுக்குரிய நிலத்தை வழங்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் முறையிட நேற்று வந்தனர். இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசனை சந்தித்து மனு அளித்தனர். அ.மணக்குடி ஊராட்சி திமுக கிளை செயலாளர் இளங்கோவன் கூறுகையில், அ.மணக்குடியைச் சேர்ந்த நிலமற்ற 200 பேருக்கு 2 ஏக்கர் நிலம் திட்டத்தில் கடந்த 2007 திமுக ஆட்சியில் தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்க பட்டா வழங்கப்பட்டது.

இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்க இருந்தபோது ஆட்சி மாற்றத்தால், அடுத்து வந்த அதிமுக அரசு கிடப்பில் போட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளதால் பட்டாவைத்துள்ள பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.

Related Stories: