மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: புதிய இடம் விரைவில் அறிவிப்பு

மதுரை: மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கான புதிய இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில், 2 லட்சம் சதுர அடியில் ‘‘கலைஞர் நினைவு நூலகம்’’ அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி, மீனாட்சி அரசு கல்லூரி, சிம்மக்கல், எல்லீஸ் நகர் என 6 பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்த 6 இடங்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் புதிய இடங்களை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நூலகம் அமைய உள்ள இடம் அமைதியான சுற்றுச்சூழலில் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை சொக்கிகுளத்தில் மேற்கு யூனியன் அலுவலகம் அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பு  பகுதிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த இடம் சுமார் 2 ஏக்கருக்கு மேல் உள்ளது. இடம் தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நூலகம் அமைப்பதற்கான இறுதி இடம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.

Related Stories: