போடிநாயக்கனூரில் வாக்கு குறைந்தது ஏன்? 10 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு கட்சிக்காரர்களிடம் ஓபிஎஸ் விசாரணை

சென்னை: போடிநாயக்கனூரில் வாக்கு குறைந்ததற்கான காரணம் குறித்து கடந்த 10 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு பூத் வாரியாக கட்சிக்காரர்களை அழைத்து ஓ.பன்னீர்செல்வம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் கட்சிக்குள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதத்திற்கும் மேல் தனித்தனி அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு அதிகம் உள்ளது. மதுரை, தேனி பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரியளவில் ஆதரவு இல்லாததால் அவர் விரக்தியில் உள்ளார்.

இந்த நிலையில், தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் கூட எதிர்பார்த்த ஓட்டு தனக்கு கிடைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கப்பட்டு வருகிறார். இன்னும், சொல்லப்போனால், ஓபிஎஸ்-சுக்கு எதிராக திமுக சார்பில் களம் இறங்கப்பட்ட தங்கதமிழ்செல்வன் அவருக்கு பெரிய அளவில் மாஸ் காட்டினார். முதல் சில ரவுண்டுகளில் தங்கதமிழ்செல்வன் கையே ஓங்கி இருந்தது. பின்னர் அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் 1,00,050 வாக்குகளும் அவருக்கு அடுத்தபடியாக தங்கதமிழ்செல்வன் (திமுக) 89,029 வாக்குகளும் பெற்றனர். சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.

போடி தொகுதியில் தனது வெற்றி கேள்விக்குறியாக இருப்பதாக சந்தேக்கப்பட்ட ஓபிஎஸ், தேர்தலுக்கு முன் பூத் வாரியாக கட்சி நிர்வாகிகளுக்கு பல லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட தொகுதி உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே ஓபிஎஸ் பிரசாரத்துக்கு சென்றார். மற்ற நாட்கள் முழுவதும் தனது தொகுதியிலேயே இருந்து, தேர்தல் பணியாற்றி வந்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 10 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு, பூத் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நான் கொடுத்த பணத்தை பொதுமக்களுக்கு கொடுத்தீர்களா, இல்லையா? அப்படி கொடுத்தால் ஏன் குறைந்த அளவு ஓட்டு எனக்கு கிடைத்துள்ளது? இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோபமாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டு வருகிறாராம். கட்சிக்காரர்களை அழைத்து விசாரித்தபோது, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏன் அதிமுக வெற்றிபெற முடியவில்லை, மக்கள் ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று கட்சியை பற்றியோ, கட்சி வளர்ச்சியை பற்றியோ எந்த கேள்வியும் கேட்காமல், தனது தொகுதியை முன்னிறுத்தி ஓ.பன்னீர்செல்வம் கேள்வி கேட்டு வருவதால் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம். நான் கொடுத்த பணத்தை பொதுமக்களுக்கு கொடுத்தீர்களா, இல்லையா. அப்படி கொடுத்தால் ஏன் குறைந்த அளவு ஓட்டு எனக்கு கிடைத்துள்ளது.

Related Stories: