விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்ததை மறைத்து ஓபிஎஸ் விஷமத்தனமான அறிக்கை வெளியிடக்கூடாது: தொழில் துறை அமைச்சர் கண்டனம்

சென்னை: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்திட்டம் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே, குறிப்பாக 2018ம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணூர்-மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிவுபெற்று இத்திட்டம் கடந்த 6.3.2019 அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோன்று, ராமநாதபுரம்-தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த 17.2.2021 அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த நிகழ்வின்போது அப்போதைய  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றதை நினைவுகூர விரும்புகிறேன்.

எங்கெங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது. இந்த அரசு விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: