கொரோனா உலகை ஆட்டிப் படைக்கும் நிலையில் குரங்கு ‘பிவி’ தொற்றால் சீன டாக்டர் மரணம்: ஆராய்ச்சியில் மூழ்கிய போது ஏற்பட்ட சோகம்

பீஜிங்: சீனாவில் குரங்கு ‘பிவி’ தொற்றால் அந்நாட்டு டாக்டர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் நிலையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர்(53), கால்நடை, மனிதரல்லாத விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு  திடீரென ஏற்பட்ட குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் கடந்த மே 27ம் தேதியன்று இறந்தார். ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய மருத்துவர் என்பதால், அவரது மரணம் குறித்து தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்விவகாரம் குறித்து சீன மையத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையை, குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், ‘மார்ச் மாத தொடக்கத்தில் இறந்த இரண்டு குரங்குகளை, ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன்பின், அடுத்த சில வாரங்களில் அவருக்கு தொற்று அறிகுறி தெரியவந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.

அவருக்கு ‘குரங்கு பி வைரஸ்’ (பிவி) தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் குரங்கால் ஏற்பட்ட முதல் மனித நோய்த்தொற்று இதுவாகும். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர். சீனாவில் இதற்கு முன், இதுபோன்ற குரங்கு ‘பிவி’ நோய்த்தொற்று ஏதும் ஏற்படவில்லை. தற்போது முதல்முறையாக ‘பிவி’ தொற்று மனிதருக்கு பரவியுள்ளதால், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இறந்த மருத்துவரின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சோதித்த போது, அவருக்கு குரங்கு ‘பிவி’ பாசிடிவ் தொற்று இருப்பது உறுதியானது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதித்ததில், அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. குரங்குகள் மூலம் ஏற்பட்ட ‘பிவி’ தொற்றானது, தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும். அதனால், சீனாவில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் தொழில்சார் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துவது அவசியம்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் உலகையே புரட்டி போட்டுள்ள கொரோனாவிற்கு மத்தியில் சீனாவில் இருந்து அடுத்த வைரசாக குரங்கு ‘பிவி’ பரவி மருத்துவர் இறந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: