சாலை விபத்தில் உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.13.80 லட்சம் நிதியுதவி

மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தணிகைவேல் (45) பணிபுரிந்து வந்தார். இவர், ஊரடங்கு கால பணிகளில் ஈடுபட்டுவிட்டு, சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக கடந்த ஜனவரி 9ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது பூஞ்சேரி கூட்ரோடு அருகே லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.   இவரது மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்த கேள்வியும் போலீசார் மத்தியில் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 1997ம் ஆண்டு சேலம் பயிற்சி பள்ளியில் பயிற்சி எடுத்த சக காவலர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை வழங்க வேண்டுமென முடிவு செய்தனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக 1997ம் ‘பேட்ச்’ காவலர்களிடம் உதவித்தொகைகள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட ரூ. 13,80,500 லட்சத்தை வசூல் செய்து, ஏட்டுவின் குழந்தை பேரில் ரூ.9 லட்சத்தை எல்ஐசியில் டெபாசிட் செய்து, மீதமுள்ள ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 500ஐ தணிகைவேல் மனைவியிடம் செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார் மற்றும் போலீசார் வழங்கினர்.

Related Stories: