புதுகை, தஞ்சை மாவட்டங்களில் ரூ500 கோடி புரளும் மொய் விருந்துக்கு அனுமதி கிடைக்குமா?

புதுக்கோட்டை: தஞ்சை,  புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி, ஆனி மாதங்களில் மொய்  விருந்து விழா களைகட்டும். ரூ.500 கோடி வரை புரளும் இந்த விழாக்களுக்கு  இந்தாண்டு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆண்டு  தோறும் ஆடி, ஆனி மாதங்களில் கலாசாரம் சார்ந்த விழாவாக மொய் விருந்து விழா  நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், வடகாடு, கீரமங்கலம்,  அணவயல், மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம் மற்றும் இதை சுற்றியுள்ள  கிராமங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களிலும் விழா நடைபெறும்.

இதில் சுமார்  ரூ.500 கோடி வரை மொய் பணம் வசூலாகும். பிளக்ஸ் பேனர்கள் அந்த பகுதி  முழுவதும் பளபளக்கும். திருவிழா போல் இந்த விழா நடக்கும். பேராவூரணி  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  சமூகத்தில் பின் தங்கியுள்ள  மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டது  தான் மொய்விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை  மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவி தற்போது,  இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வதாரமாக மாறிவிட்டது. விழாவிற்கு  வரவேண்டி அழைத்து வீடுகள் தோறும் சென்று அழைப்பிதழ் வழங்குவார்கள்.  

விழாவுக்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து  வரவேற்பார்கள். பின்னர் அவர்களுக்கு பிரியாணி, கோழி, ஆட்டுக்கறி விருந்து  பரிமாறப்படும். சாப்பிட்டு முடிந்ததும், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில்  மொய் எழுதுவார்கள்.  10 பேர் முதல் 30 பேர் வரை இணைந்து, மொய் விருந்து  வைப்பார்கள். வசூலாகும் பணத்தை பிரித்துக்கொள்வார்கள். குழுவாக இணைந்து  விழா நடத்துவதால், செலவு குறையும். 2019ல் நடந்த மொய்  விருந்துகளில் அதிகபட்சமாக ரூ.500 கோடி வரை வசூலானது. ஆனால் கடந்தாண்டு  கொரோனா ஊரடங்கால் ஆடி, ஆனி மாதங்களில் மொய் விருந்து விழாக்கள்  நடைபெறவில்லை.

சில மாதங்கள் தாமதமாகவே விழாக்கள் நடந்தது. அதில்  அதிகபட்சமாக ரூ.200 கோடி வரைதான் வசூலானது. இந்தாண்டு ஆடி பிறந்து  விட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மொய் விருந்துக்கு  அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட விழா ஏற்பாட்டாளர்கள்  கூறுகையில், இந்தாண்டு மொய் விருந்துக்கு அரசு அனுமதி அளிக்கும் என்ற  நம்பிக்கையில் உள்ளோம். இப்போதே இதற்காக விழா நடைபெறும் இடங்களில் உள்ள  திருமண  மண்டபங்கள் புக் செய்யப்பட்டு விட்டன. கடந்தாண்டு முக  கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகிய கொரோனா விதிகளை பின்பற்றி  மொய் விருந்து நடந்தது. அதேபோல் அரசு அனுமதித்தால் இந்தாண்டும் விதிகளை  பின்பற்றி நடத்துவோம் என்றனர்.

4 ஆண்டுக்கு ஒரு முறை விழா

ஒரு  முறை மொய் விருந்து வைப்பவர்கள், அடுத்ததாக 4 ஆண்டு கழித்து தான் விழா  நடத்த முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விழா நடத்தும் காலம் 5  ஆண்டுகளாக இருந்தது. இப்போது 4 ஆண்டுகளாக குறைந்துள்ளது.

Related Stories: