அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் அரிய நிகழ்வாக ஒருவருக்கு மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு உறுதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கிபாக்ஸ் வைரசின் தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஏற்பட்ட நபர் டல்லாஸ் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் லாகோஸ் நகரில் இருந்து நைஜீரியா, டல்லாஸ் என பயணம் செய்து வந்துள்ளார்.

எனவே அவருடன் விமான பயணம் செய்த பயணிகளை தொடர்பு கொள்ளும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளது. இந்த மங்கிபாக்ஸ் வைரசானது தொடக்கத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தும். அதன்பின் சிறிய கட்டிகள் போன்ற வீக்கம் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடல் முழுவதும் பரவும். 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். பெரியம்மை உடன் தொடர்புடைய இந்த வைரஸ் பாதிப்பு அரிய நிகழ்வு என்றாலும் தீவிர நோய் தன்மை ஏற்படுத்த கூடியது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல்தெரிவித்துள்ளது.

Related Stories: