பழநி கிரிவீதி சுற்றுலா பஸ்நிலையத்திற்கு இடும்பன் மலை பைபாஸில் இருந்து இணைப்பு சாலை திட்டம்: நடைமுறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

பழநி: பழநி கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையத்திற்கு இடும்பன் மலை பைபாஸில் இருந்து இணைப்புச்சாலை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் வருகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என 7 மாதங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இக்காலங்களில் வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அருள்ஜோதி வீதியில் ஒரு இலவச சுற்றுலா பஸ்நிலையமும், கிழக்கு கிரிவீதியில் ஒரு இலவச சுற்றுலா பஸ்நிலையமும் திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் பக்தர்கள் வரும் வாகனங்கள் நிறுத்த தேவையான இடம் கிடைக்க பெற்றுள்ளது. அருள்ஜோதிவீதியில் உள்ள சுற்றுலா பஸ்நிறுத்தத்திற்கு மயிலாடும்பாறை சாலை மற்றும் வையாபுரி கண்மாய் பைபாஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையம் பெரிய பரப்பை கொண்டது. ஆனால், இந்த பஸ்நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு போதிய விசாலமான வழித்தடம் இல்லை. கூட்ட நேரங்களில் கிரிவீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரத்தில் வாகனங்கள் செல்வதால் அப்பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்க்க இடும்பன் மலையின் தெற்கு பகுதியில் இருந்து சுற்றுலா பஸ்நிலையத்திற்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். சாலை அமைப்பதில் பெரும்பாலான இடம் அரசு நிலமாகவும், சில நிலங்கள் தனியாருக்கு சொந்தமானதாகவும் இருந்தன. தனியார் நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க சம்மதம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினர் மூலம் முதற்கட்ட ஆய்வுப்பணியும் துவங்கப்பட்டன. ஆனால், அதன்பின் இப்பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழநியில் சீசன் துவங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: