ஆனிவார ஆஸ்தான வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிப்பு திருப்பதி மலையப்பர் புஷ்ப பல்லக்கில் உலா: ரங்கம் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் சம்பிரதாய முறைப்படி சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆனி வார ஆஸ்தான நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.  இதையொட்டி, அதிகாலை ஏழுமலையானின் சேனாதிபதி விஸ்வசேனர், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் துவார பாலகர்கள் அருகே கொலு வைக்கப்பட்டு வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆஸ்தானத்தை நடத்தினர்.

பின்னர், கடந்த ஆண்டிற்கான வரவு, செலவு கணக்குகள் சுவாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சேவையில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து தலா ₹1 பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்பட்டது. பிறகு, ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில்   ஏழுமலையான் கோயில் செயல் அலுவலர்  ஜவகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, யானைகள் ஊர்வலமாக முன்னால் செல்ல, பட்டு வஸ்திரங்கள் ஊர்வலமாக  ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லக்கில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தமிழக அரசுக்கு ஜீயர் வாழ்த்து

ஜீயர் மடத்தில் பட்டு வஸ்திரங்கள் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அப்போது, ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், ‘திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதை பத்திரிகை, தொலைக்காட்சியில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்தேன். தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி இதேபோன்று மேலும் தொடர வேண்டும்,’ என்று வாழ்த்தினார்.

Related Stories: