‘மாஸ்கை’ காலில் மாட்டிய பாஜக அமைச்சர்: காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம்

டேராடூன்: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக் கவசங்களை கட்டாயம் அணிந்துகொள்ள, பொது மக்களை மத்திய, மாநில அரசுகள்  கட்டாயப்படுத்துகிறது. ஆனால் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள், மோசமான நடத்தையை பின்பற்றுவது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநில ஆளும் பாஜக அமைச்சர் சுவாமி யதேஸ்வரானந்தா, சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தனது முகக்கவசத்தை கால் விரலில் மாட்டிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், இந்த கூட்டத்தில் இருந்த மற்ற நான்கு பேரும் முகக்கவசம் அணியவில்லை.

இந்த படத்தைப் உத்தரகாண்ட் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கரிமா மெஹ்ரா தசவுனி சமூக ஊடகங்களில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘ஆளும் கட்சி முகக் கவசம் அணியாமல் செல்லும் மக்களை பிடித்து தண்டனை அளிக்கிறது. இரண்டாவது அலையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அடுத்ததாக மூன்றாம் அலை வரும் என்கின்றனர். ஆனால், மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைச்சர், அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை அலட்சியம் செய்துள்ளார். முகக் கவசத்தை எதற்காக தனது கால் விரல்களில் மாட்டிவிட்டுள்ளார்? என்பதை அவர் விளக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: