உட்கட்சி பூசலுக்கு தீர்வு சித்துவுக்கு பஞ்சாப் காங். தலைவர் பதவி?

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இங்கு நடைபெறும் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காண மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தின் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், முதல்வர் அமரீந்தர் சிங், அதிருப்தி தலைவர் சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அக்குழு சித்துக்கு துணை முதல்வர் பதவி, தலித் தலைவர்களுக்கு பதவி உள்பட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தது. இதனிடையே, அமரீந்தர் சிங், சித்து ஆகியோர் ராகுல், பிரியங்கா காந்தியை தனித்தனியே நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பஞ்சாப் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணும் வகையில், சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் இந்து, தலித் சமூகத்தை சேர்ந்த இருவர் செயல் தலைவராக நியமிக்கப்பட உள்ளனர். பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் தொடருவார். அதே நேரம், அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் சிங்கை  முன்னிறுத்தி எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பு தலைவர் ஹரிஷ் ராவத் கூறுகையில், ``அமரீந்தர், சித்து இடையேயான மோதல் போக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அது 2 அல்லது 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: