மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் எம்எல்ஏ ஆய்வு

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் ஒன்றியம் சின்ன வெண்மணி, விராலூர், நல்லூர் ஆகிய கிராமங்களில் மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், நேரில் சென்று கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது குடிநீர் பிரச்னை, தெரு விளக்கு, சாலை, சுடுகாட்டுக்கு பாதை உள்பட பல்வேறு பிரச்னைகளை குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து, சின்ன வெண்மணியில், சுடுகாட்டுக்கு வழிபாதை அமைப்பதற்கான இடம், பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

 மேலும், அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறு மிகவும் பழுதாகி சுகாதாரமற்ற குடிநீராக உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து எம்எல்ஏ அங்கு சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அவருடன் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகி சின்ன வெண்மணி சுரேஷ், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்கிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: