நெமிலி ஒன்றியத்தில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டும் வீண் பழுதடைந்து கிடக்கும் 13 உயர் கோபுர மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெமிலி: நெமிலி ஒன்றியத்தில் பல லட்சம்   மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பழுதடைந்து இருக்கும் 13 உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள அசநெல்லிகுப்பத்தில் - 3, சமயபுரத்தில் -3 ,காட்டுப்பாக்கத்தில் -2 , திருமாதலம்பாக்கதம்தில் -1, சேந்தமங்கலத்தில் -1 ,கடம்பநல்லூரில் -1, நாகவேட்டில் - 1, பள்ளூரில் -1 என பல்வேறு கிராமங்களில் 2013-2014 ஆண்டில் திமுக எம்பி கனிமொழி, எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோரது மேம்பாட்டு நிதியில் 13 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஒரு விளக்கு ₹6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களில் பொதுமக்களின் பிரதான சாலை மற்றும் நான்குவழிச்சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக 5 ஆண்டுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.உயர் கோபுர மின் விளக்குகளை சரிவர பராமரிக்காததால் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மின்விளக்குகள் பழுதடைந்தது. இதனால் இரவு நேரங்களில் வரும் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருளில் இப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே அப்பகுதிகளில் உள்ள பொது மக்களின் நலன் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நெமிலி ஒன்றியத்தில் உள்ள 13 உயர் கோபுர மின்விளக்குகளை  சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: