திருவாலங்காடு ஒன்றியம் பகுதிகளில் இலைக்கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு: வேளாண் கல்லூரியினர் அறிவுரை

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பகுதியில், பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிர்கள் இலைக்கருகல் நோய் தாக்கி சேதம் அடைந்தன. இதை தொடர்ந்து, திரூர் வேளாண் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர், இணை பேராசிரியர் ஆகியோர் நேரில் சென்று,  விவசாயிகள் இந்நோய்க்கு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து,  அறிவுரை வழங்கினர். திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னத்தூர், மாமண்டூர், அருங்குளம், நபாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். இந்த நெற்பயிர்கள் திடீரென இலை கருகல் பூச்சி நோய் தாக்கியதில் பயிர்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, திரூர் வேளாண் அறிவியல் கல்லூரியில் இருந்து இணைப் பேராசிரியர் மணிமேகலை, உதவிப் பேராசிரியை விஜயசாந்தி, திருவலங்காடு உதவி இயக்குனர் அனிதா உள்பட வேளாண் அதிகாரிகள் நேற்று குன்னத்தூர் கிராமத்துக்கு நேரில் சென்று, பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிரை ஆய்வு செய்தனர். அப்போது, நெற்பயிர்களை இலை சுருட்டல் பூச்சி தாக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இது பாக்டீரியா இலை கருகல் நோய் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர்,  பேராசிரியர்கள், பயிருக்கு என்ன உரம் போட்டீர்கள்? என்ன பூச்சி கொல்லி மருந்து அடித்தீர்கள்? என விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து, வேளாண் கல்லூரியினர் ‘‘இந்த பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுபடுத்துவதற்கு பிளான்ட் மைச்சின் 120 கிராம், காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலையில் தெளிக்க வேண்டும். மழை வரும்போது தெளிக்கக் கூடாது மேலும் பூச்சி மருந்து அடிப்பதற்கு முன், வயல்வெளியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு அடிக்கவேண்டும். நோய் தீவிரம் அதிகமாக இருந்தால், 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பூச்சி மருந்து அடிக்க வேண்டும்’’ என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். அவர்களுடன், வேளாண் துணை அலுவலர் முனுசாமி, வேளாண் உதவி அலுவலர் பானுப்பிரியா உள்பட வேளாண் துறை ஊழியர்கள் பலர் இருந்தனர்.

Related Stories: