மண்மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்-டிஎஸ்பியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் கடிதம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அடுத்த மண்மலை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஒரு தரப்பு சார்பில் ரூ.5.50 லட்சம் ஏலம் விடப்பட்டன. இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மற்றொரு தரப்பினரும் அதே நாளில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஏலம் விட்டனர். இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி சில இளைஞர்கள், பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆகியோர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி ராஜலட்சுமி, மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மண்மலை கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்று இருதரப்பு ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஏலம் விட அனுமதிப்பது சட்ட விரோதமானது.

கிராமத்தில் சாராயம் விற்பனை செய்தால் ஊர் முக்கியஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த கோயிலை சீரமைக்க வேண்டி ரகசியமாக சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்பட்டது தெரியவந்தது. தற்போது பிரச்னை ஏற்பட்டதால் இனி ஏலத்துக்கு அனுமதிக்க மாட்டோம். கிராம மக்களிடையே வசூல் செய்து கோயில் பராமரிப்பு பணிகளை மேள்கொள்கிறோம் என போலீசார் முன்னிலையில் கிராம ஊராட்சி செயலர் பெரியான், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் இருதரப்பை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் உறுதியளித்து தனித்தனியாக கடிதம் எழுதி டிஎஸ்பி ராஜலட்சுமியுடம் கொடுத்தனர்.

Related Stories: