மதுக்கூர் வட்டாரத்தில் உளுந்து விதைப்பண்ணைகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் உளுந்து விதைப்பண்ணைகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.மதுக்கூர் வடக்கில் விவசாயி மூர்த்தி என்பவரது வயலில் அமைக்கப்பட்ட உளுந்து விதைப்பண்ணையினை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி, வேளாண்மை அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், முருகேஷ் ஆகியோருடன் களத்தில் ஆய்வு செய்து பிற ரக கலப்பு ஏதும் இருக்கிறதா மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயி மூர்த்தி, பிற விவசாயிகள்போல் சாதாரணமாக உளுந்து தெளித்து சாகுபடி செய்யாமல் நேர்த்தியாக மேட்டுப்பாத்திகள் அமைத்து சரியான இடைவெளியில் விதைகளை விதைத்து பயிர் எண்ணிக்கையை மிகச் சிறப்பாக பராமரித்து வருவது தெரியவந்தது. இதனால் உளுந்து பயிர் பூச்சி நோய் தாக்குதலின்றி மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளதும், மேலும் இதற்கான நீர் தேவையும் குறைவாக உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து விவசாயி மூர்த்தி கூறுகையில், ஒரு ஹெக்டருக்கு 1,750 கிலோ வரை உளுந்து மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நெம்மேலியில் பெரமையன் மற்றும் சேதுராமன் வயல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வம்பன் 11 ரகத்தின் விதை பண்ணைகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், வேளாண் உதவி அலுவலர்கள் முருகேஷ், சுரேஷ், பூமிநாதனிடம் உளுந்து சாகுபடி பரப்பினை ஈடுபாடின்றி அனைத்து கிராமங்களிலும் கணக்கீடு செய்து ஒத்திசைவு செய்திடவும், தென்னந்தோப்புகளில் உள்ள ஊடு பயிர்களையும் ஒத்திசைவு பரப்பில் கொண்டுவரவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: