ஹிமாச்சல் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு: அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி உறுதி

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். இதேபோன்று முதலமைச்சர் ஜெய்ராம் தாகூரிடம் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதே உறுதியை அளித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேகவெடிப்பு போன்ற கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா தலமான தர்மசாலா மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான கார்கள், பைக்குகள் அடித்து செல்லப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தரமசாலா அருகேயுள்ள சுற்றுலாத்தலத்தில் ஒரேநேரத்தில் 4 கார்கள் மற்றும் 10திற்கும் மேற்பட்ட பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தற்போதும் மோசமான வானிலை நிலவுவதால் தர்மசாலா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹிமாச்சல் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.

Related Stories: