'சீன கம்யூ. கட்சியில் சேர ஆர்வமாக இருக்கின்றேன்'!: அரசியலில் குதிக்க விருப்பம் தெரிவித்தார் ஹாலிவுட் கதாநாயகர் ஜாக்கி சான்..!!

பெய்ஜிங்: பிரபல ஹாலிவுட் கதாநாயகனும் இயக்குனருமான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த பிரபல அதிரடி ஹீரோ ஜாக்கி சான், தனது ஸ்டண்ட் படங்கள் மூலமாக உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர். தற்போது 67 வயதாகும் ஜாக்கி சான் சீன திரைப்பட சங்கத்தின் துணை தலைவராகவும் செயலாற்றி வருகிறார். தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற திரைப்பட சங்க விழா ஒன்றில் பங்கேற்று பேசிய ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவில் அதிபர் ஜி ஜின்பிங் ஆற்றிய உரைக்கு பாராட்டு தெரிவித்தார்.

சீனா மிகவும் வேகமாக முன்னேறி வரும் நாடு என்று குறிப்பிட்ட அவர், பல நாடுகளுக்கு நான் சென்ற போது இதனை நேரடியாக உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ஜாக்கி சான், ஐந்து நட்சத்திரங்களை உடைய சீனாவின் சிவப்பு கோடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது என்றார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருப்பதாகவும் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ள சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஹாங்காங்கில் பிறந்தவரான ஜாக்கி சான், சீனாவுக்கு ஆதரவாக பேசியதால் ஏற்கனவே பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது ஹாங்காங்கில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Related Stories: